வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் குழு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம். - 02.10.2026
வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் உதவிப் பிரதம செயலாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த எமது அலுவலக உத்தியோகத்தர்களை, மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் தலைமையிலான பதவி நிலை உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.
இதன்போது, 2025/26ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமைக்கான காரணிகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்ட உற்பத்தித்திறன் செயற்பாடுகள் தொடர்பாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரினால் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வளங்கள், முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தளங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் எமது உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து, வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலகத்தின் பல்வேறு கிளைகளுக்கும் விஜயம் செய்து, அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டதுடன், அவற்றைப் பாராட்டியும் கொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், மாவட்ட செயலக கணக்காளர் ரீ.மதன் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர் பலரும் கலந்துகொண்டனர்.







